கோவை மேட்டுப்பாளையத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் பரளிக்காடு பூச்சிமரத்தூர் சுற்றுலாத் தலம் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை - A special article on the scenic Paralikadhu Poochimarathur tourist spot located near Mettupalayam, Coimbatore.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு அருகில் அமைந்துள்ள அதிகம் அறியப்படாத, இயற்கை எழில் கொஞ்சும் பரளிக்காடு பூச்சிமரத்தூர் சுற்றுலாத் தலம் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை:

அமைவிடம்:

      இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், அது பொக்கிஷத்தை தேடிச்செல்வது போன்றது தான். அப்படிப்பட்ட இயற்கை வனப்போடு நம்மை ஆரத்தழுவி அணைத்து வரவேற்கின்றது கோயம்புத்தூர் மாவட்டத்தின் பரளிக்காடு சுற்றுலாத் தலம்.



          கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கின்றது காரமடை. அங்கிருந்து கிளை பிரியும் தோலாம்பாளையம் சாலையில் சென்றால், சுமார் 30 கிலோமீட்டர் பசுஞ்சாலைப் பயணத்திற்குப் பின் பில்லூர் அணைக்கட்டைச் சென்றடைய முடியும்.


      மேற்குத் தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை மாறாமல் இருக்கும் ஒரு மலை கிராமங்களில் ஒன்று பரளிக்காடு. இங்குள்ள பூச்சிமரத்தூர் சுற்றுலா தலத்திற்கு வந்தால் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறுவதாக மக்கள் கூறுகின்றனர். ரு. 600 இருந்தால் போதும் பரளிக்காடு சுற்றுலா தலத்தை நன்கு சுற்றிப் பார்க்கலாம். மேலும், அங்கேயே தங்கி ஒவ்வொரு இடமாக பார்க்கும் வசதிகளும் உள்ளன.


     கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 66 கி.மீ தொலைவில் இந்த பரளிக்காடு சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளை கடந்து வந்தால் இந்த இடத்தை எளிதாக அடைந்திடலாம். பரளிக்காடு, பில்லூர் அணைக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள பகுதி என்பதால்,சுற்றுலா வரும் பொதுமக்கள் பலருக்கும் பில்லூர் ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வது மிகவும் பிரபலமானது. பரிசலில் பயணம் செய்தவாறே இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

    மிகவும் சுத்தமான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறு, எங்கும் பார்த்தாலும் பச்சைப் பசேல் என தெரியும் காட்சிகள் என்று பரளிக்காடு பூச்சிமரத்தூர் சுற்றுலா தளத்தில் இயற்கை நிரம்பிக் கிடக்கிறது. அதைவிட இங்கு வாழும் மண் மணம் மாறாத மக்கள் பரளிக்காட்டை போற்றி பாதுகாத்து வருகின்றனர்.


முன்பதிவு:

          குறுகலான மலைப்பாதையில் பயணித்தால், அணைக்கட்டை ஒட்டி இருக்கும் பரளிக்காடு எனும் மலையோர கிராமத்தை சென்றடையலாம். இங்கு வாழும் பழங்குடியினர் நலனுக்காக வனத்துறையே வடிவமைத்தது தான் இந்த "பரளிக்காடு பசுமைச் சுற்றுலா". இங்கு செல்ல வனத்துறை அலுவலரிடம் தொலைபேசியில் முன் பதிவு செய்ய வேண்டும்.


     நினைத்தவுடன் பரளிக்காடு சென்றுவிட முடியாது என்பது இங்கு நாம் கவனிக்கத்தக்கது. நாம் பூச்சிமரத்தூர் சுற்றுலாத் தலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் வனத்துறையினர் ஒப்புதல் பெற வேண்டும். தவிர, இங்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.



    விடுமுறை தினங்கள் என்றால் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், எண்ணிக்கையைப் பற்றி கவலை இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். வார நாட்கள் எனில் குறைந்தது 40 நபர்கள் கொண்ட குழுவாக இருந்தால் மட்டுமே முன் பதிவு செய்வார்கள். பெரியவருக்கு ரூ.600 குழந்தைகளுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


     பூச்சிமரத்தூருக்கு குறிப்பிட்ட நேரத்தில் தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால் பேருந்தில் செல்வது பலருக்கும் சரிவராது. பைக்கில் செல்ல அனுமதி இருந்தாலும், வனவிலங்குகளுக்கு அதனால் தொந்தரவு ஏற்படக்கூடும். இதன் காரணமாக மலைப்பிரதேசங்களுக்கு ஏற்ற கார்களில் சென்று வருவதே நமக்கு சரியான தேர்வாக இருக்கும்.


பரிசல் பயணம்:

         ஆற்றங்கரையோர ஆலமரங்களில், நீண்ட ஊஞ்சல்கள் கட்டப்பட்டுள்ளன. குளிர் தருக்களின் கீழ் கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. சிறார்கள் ஊஞ்சலாடி மகிழ்கின்றார்கள். காதலர்களும், தம்பதியர்களும் இதமான சூழலை அனுபவித்த வண்ணம், கயிற்றுக் கட்டில்களில் அமர்ந்து பேசிக் களிக்கிறார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் பரிசல்கள் வந்து சேர்கின்றன.



        வழிகாட்டி அனைவரையும் உற்சாகமாக கூவி அழைத்து அனைவருக்கும் "லைஃப் ஜாக்கெட்டுகளை" அணிவிக்கிறார். சிந்தெடிக் பைபர்களினால் ஆன அகன்ற வட்டுக்களில் பயணம் தொடர்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் மட்டும் தண்ணீரன்றி வேறில்லை. பரிசலோட்டி அணைக்கட்டின் வரலாற்றையும், ஆற்று மீன்களின் சுவையையும், மிருகங்கள் தண்ணீர் அருந்த வருவதையும் சொல்லிக்கொண்டே துடுப்பை போடுகிறார். என்னதான் நட்டாற்றில் பயணித்தாலும் வெயில் மண்டையைப் பிளக்கத்தான் செய்கிறது. சுற்றிலும் உயரம் குறைவான மலைகள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ட்ரெக்கிங்:

        சிறிய இளைப்பாறலுக்குப் பின் தொடங்குகிறது டிரெக்கிங். வனத்துறை வழிகாட்டி உதவியுடன் காட்டிற்குள் நடக்கத் துவங்குகிறோம். பரளிக்காடு வனம் அடர் வனம் அல்ல. இலகுவானது. பிரம்மாண்டமான மரங்களோ, முட்புதர்களோ, காட்டுக் கொடிகளோ வழிமறிக்காததால் நடை எளிமையாக இருந்தது. சாகச மனங்களுக்கு சற்று ஏமாற்றம்தான் என்றபோதும் குழந்தை குட்டிகளோடுச் செல்ல மிகவும் ஏற்ற, சிக்கல்களில்லாத காட்டுப்பயணம்.



      இவை அனைத்தும் ஒரு நாளுக்கான சுற்றுலாத் திட்டம் ஆகும்.இங்கேயே சில நாட்கள் தங்கி சுற்றுப்பார்க்க விரும்புபவர்களுக்கு டிரெக்கிங் செல்லும் வசதியும் உள்ளது. ஒருநாள் சுற்றுலாவுக்கும், சில நாட்கள் தங்கி சுற்றிப் பார்ப்பதற்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.


கிராமத்து உணவுகள்:

      பூச்சிமரத்தூர் பரிசல் துறைமுகத்தில் இருந்து சுற்றுலா தொடங்குகிறது. அங்கு வரும் பயணிகளுக்கு பரளிக்காடு மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர் நமக்கு சுக்கு காப்பி கொடுத்து வரவேற்பு தெரிவிப்பார்கள். அதை தொடர்ந்து பரிசலில் ஏறி, பில்லூர் ஆற்றில் மிதந்து சென்றவாறே சுற்றுலாவை தொடங்கலாம்!


     இரண்டு மணிநேர பரிசல் பயணத்திற்கு பிறகு, மலையடிவாரத்தில் பயணிகள் ஓய்வெடுக்கலாம். அதைத் தொடர்ந்து அந்த வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளை பார்வையிடலாம். அங்கேயே மதிய உணவு சுடச்சுட பரிமாறப்படுகிறது. இதை மலைவாழ் மக்களே தயார் செய்கின்றனர்.



        பரிசல் மறுகரையை அடைந்ததும் பயணிகளின் ஆட்டமும் பாட்டமும் ஆரம்பமாகிறது. கொஞ்சம் பெரியவர்கள் வழிகாட்டியின் உதவியோடு,  குறுக்கும் நெடுக்குமாய் விழுந்து கிடக்கும் மரங்களில் ஏறி இறங்கி வனத்திற்குள் நுழைகிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் மதிய உணவு தயார் என்ற அறிவிப்பு வருகிறது.


      இங்கு மலைவாழ் மக்களே தயாரித்த சுவையான உணவு வகைகள் காத்திருக்கின்றன. பஃபே சிஸ்டம். நகர்ப்புறத்துக்காரர்களுக்கு கிராமத்து உணவுகளில் பிரியம் இருக்காது என்பதால் மெனுவில் வெஜ் பிரியாணி, சப்பாத்தி, தயிர்சாதம் என சமதர்மம் கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய மெனுவில் இருந்த கேப்பை களி உருண்டையும், அதற்குத் தொட்டுக்கொள்ள கொடுத்த கீரை கடைசலும் "கொண்டா கொண்டா" என்று மிகவும் சுவையாக இருந்தது!

ஆற்றுக் குளியல்:

       சாப்பிட்டு முடித்தவுடன், காரமடைக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த ஆற்றில் பயணிகள் குளிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தண்ணீர் வருவதால் இதை மூலிகை ஆறு எனவும் அப்பகுதி வாசிகள் குறிப்பிடுகின்றனர். அதற்கு பிறகு பயணிகள் பரிசலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.



      பிரயாணத்தின் இறுதிப் பகுதி அத்திக்கடவு ஆற்றில் ஆனந்தக் குளியல். காவியைக் கரைத்த மாதிரி செம்மண் நிறத்தில் கரைபுரண்டு வருகிறது ஆறு. காலம் தப்பி வந்த திடீர் மழையால் ஆற்றில் நல்ல வெள்ளம். படுகை முழுக்க யானை முதுகு போன்ற பிரம்மாண்டமான பாறைகள். நூற்றாண்டு உருளலில் கற்கள் அனைத்தும் தனக்கான தனிப்பொலிவை அடைந்திருக்கின்றன. வீட்டுப்பெண்கள் உருளைக் கற்களை ஆசையோடு சேகரித்துக் கொள்கின்றனர். 


         கிழங்கு மஞ்சள் அரைக்க, பூண்டு நசுக்க, பனங்கற்கண்டு நுணுக்க அருமையான உபகரணம். ஆற்றின் கரையோரத்தில் உயரம் உயரமான மாமரங்கள் தலைகொள்ளாத மாங்காய்களுடன் காய்த்து நிற்கின்றன. மழைச் சகதியில் விழுந்து கிடக்கும் மாம்பிஞ்சுகளைப் பொறுக்கியெடுத்து ஆற்றில் கழுவி உப்புச் சேர்த்து திங்க சுவை அபாரம்! நீந்திக் குளிக்க முடிகிற அளவிற்கு ஆழமில்லாத ஆறு. பாறைகள் வேறு அதிகம். ஒரு குத்துப் பாறையினைப் பிடித்துக்கொண்டு உடலை நீட்டிக்கொண்டால் நம்மைக் கழுவிக் கரைக்கும் ஆவேசத்துடன் தழுவிக் கொள்கிறது ஆறு. 


        இறங்கிய ஜனங்களெல்லாம் பாறைகளோடு பாறையாக ஊறிக் கொண்டேதான் இருக்கிறார்கள். கரையேற எவருக்கும் மனமில்லை. மாலைச் சூரியன் மெள்ள மேற்கில் சரிய வழிகாட்டி குரலெழுப்புகிறார்.குடும்பத்தோடு காலையில் கிளம்பி மாலையில் வீடு திரும்பிவிட முடிகிற ஒரு பிக்னிக் ஸ்பாட்டாகத்தான் கருத முடியும். 


       பூச்சிமரத்தூர் சுற்றுலாத் தலத்தில் மொத்தம் 5 தங்கும் விடுதிகள் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு அறைகளிலும் 8 பேர் வரை தங்கலாம். இந்த சுற்றுலா முழுக்க முழுக்க வனத்துறையினரின் கண்காணிப்பு கீழ் நடப்பதால் குடும்பத்துடன் தைரியமாக வந்து செல்லலாம்.


       இங்கு மது அருந்தவும், புகைப்பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் இங்கு அனுமதி கிடையாது. பழங்குடியின மக்களுக்கு நிரந்தர வருமானம் ஏற்படுத்தி தரும் நோக்கில் தான் பரளிக்காடு பூச்சிமரத்தூர் சுற்றுலா செயல்பட்டு வருகின்றது.



"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



Post a Comment

أحدث أقدم