அரசு தாவரவியல் பூங்கா ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள் ஒரு பார்வை ( A look at the tourist sites in and around the Government Botanical Garden Ooty )

 

அரசு தாவரவியல் பூங்கா

ஜி.பி.ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் உதகை அரசு தாவரவியல் பூங்கா உலகப்புகழ் பெற்றது மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்தும் பார்வையாளர்களை ஈர்க்கவல்லது. 1847-ம் ஆண்டு சென்னை மாகாண ஆளுனராக இருந்த மார்குவிஸ் டுவீடேல் உதகையில் தாவரவியல் பூங்காவை உருவாக்க தோட்டக்கலை சங்கத்தை ஆரம்பித்தார். 1848-ம் ஆண்டு திரு.ஜெ.டபிள்யூ. மேக்ஐவர் பூங்காவினை வடிவமைப்பு செய்ய ஆரம்பித்து 1867-ல் முடித்தார். 22 எக்டர் பரப்பில் அமைந்துள்ள இப்பூங்கா கடல் மட்டத்திலிருந்து 2400-2500 மீ. உயரத்தில் உள்ளது. இப்பூங்காவில் புன்னைகைக்கும் பூமரங்கள், குறைவில்லா குத்துச் செடிகள், கண்கவர் கற்றாழைகள், வளப்பமான கள்ளி வகைகள், பசுமை மிகு பெரணிகள் கண்ணாடிக் குடில்களில் மிளிரும் தாரங்கள், ஆண்டு மலர்த் தாவரங்கள் என 2000க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. பசுமையான புல்வெளி, கோட்டை வீடு, பெரணி இல்லம், கண்ணாடி குடில், நூற்றாண்டு நினைவு தூண், இந்திய வரைபடம், 200 இலட்சம் வயதுடைய தொல்லியல் படிம மரம், அல்லி குளம், ரோஜா பூங்கா, தமிழ்நாடு சின்னம், இத்தாலிய பூங்கா, நீர்வீழ்ச்சி, தாழ்விடத் தோட்டம் மற்றும் அழகான பூம்படுக்கைகள்.

பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டினர் உள்ளிட்ட 20 இலட்சம் சுற்றுலா பயணிகள் இப்பூங்காவின் அமைதியான அழகை கண்டு மகிழ்கின்றனர். குறிப்பாக இப்பூங்கா கோடைக் காலங்களில் மேலான அழகுடன் திகழ்ந்து அதிக எண்ணிக்கையில் வரும் ஆங்கில தோட்ட ஆர்வலர்களின் தேர்வுக்குரிய இடமாக விளங்குகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தாவரவியல் மற்றும் வனவியல் மாணவர்கள் இங்கு வந்து அவர்கள் அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள். பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் மாணவர்களை ஈர்ப்பதற்கு ஒவ்வொரு வருடமும் மே மாதம் உலகப்புகழ் பெற்ற மலர் கண்காட்சி இங்கு நடத்தப்படுகிறது. மலர் உற்பத்தியாளர்கள் மற்றும் பூங்கா ஆர்வலர்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த மலைத் தோட்டப் பூங்காக்கள், பண்ணை வீட்டுப் பூங்கா, பொதுப் பூங்கா மற்றும் பிறவகைப் பூங்காக்களுக்கு இடையேயான போட்டியும் நடத்தப்படுகிறது

   

ரசு ரோஜா பூங்கா

உதகை மலர்க் கண்காட்சியின் நூற்றாண்டினை ஒட்டி உதயமானதே உதகை ரோஜாத் தோட்டம். ஐந்து அடுக்குகளைக் கொண்ட இத்தோட்டம் 4 எக்டர் பரப்பிலானது. இப்பூங்காவானது எல்க் குன்றின் சரிவில் அமைந்துள்ள விஜயநகரம் பண்ணையின் வடமேற்குப் பகுதியில் உதகை நகரை நோக்கும் வகையில் அமைந்துள்ளது.

பெங்களூரு, சண்டிகர், கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஊட்டியிலிருந்து சேகரிக்கப்பட்ட 3800 இரகங்களைச் சார்ந்த 25,000 ரோஜாச் செடிகள் இத்தோட்டத்தில் தழைத்துள்ளன. புளோரிபன்டா, பாலியான்த்தா, குறு ரோஜாக்கள், கலப்பின ரோஜாக்கள் மற்றும் கொடி ரோஜா போன்றவை இதில் அடங்கும். இந்தியா மற்றும் அயல்நாடுகளிலுள்ள பல்வேறு மையங்களிலிருந்து புதிய இரகங்களை இங்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த எண்ணிக்கையை படிப்படியாக 50000 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அலங்கார வளைவுகள், கொடிப்பந்தல், கொடிக்குகைகள், நிழற்குடைகள், பசுமைக்குடில்கள், நீருற்றுகள், நிலா மாடம், கற்கூண்டு விளக்குகள் மற்றும் பாறைத் தோட்டம் ஆகிய சிறப்பான அம்சங்களையும் இப்பூங்கா தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த ரோஜாத் தோட்டத்தின் உண்மை அழகு அதன் வனப்புமிகு ரோஜாக்களால் மட்டும் உண்டானதல்ல. அடுக்குத் தளங்கள் அமைத்ததன் மூலம் இப்பகுதியின் நிலவடிவமைப்பு குலையாவண்ணம் பாதுகாத்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும். இத்தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 அடுக்குத் தளங்களும் ஐந்து விதமான அனுபவங்களை பார்வையாளர்களுக்கு அளித்து அவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கின்றன. மும்பை மாளிகைக்கு இட்டுச் செல்லும் சாலையின் கீழ் அமையப் பெற்றுள்ள முதல் அடுக்குத் தளத்தில் குறுவகை ரோஜாக்களின் காட்சியகம் அமைந்துள்ளது. ரோஜாத் தோட்டத்தின் முதன்மையும் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய அடுக்கு இரண்டாவது அடுக்குத் தளமாகும். தோட்டத்தின் வாயில் இத்தளத்திற்கு இட்டுச் செல்கிறது. இத்தளத்தில் பல்வகை ரோஜாக்கள் அவற்றின் நிறத்தின் அடிப்படையில்  தொகுக்கப்பட்டு தளத்தின் இருபுறங்களிலும் பராமரிக்கப்படுகின்றன. இத்தளத்தின் மையப் பகுதியில் புல்வெளி பராமரிக்கப்படுகிறது. கிக்கியு புல் மற்றும் நீலப்புல் வேயப்பட்ட இந்தப் புல்வெளி காண்போர் கண்களுக்கு விருந்தாக உள்ளது. பார்வையாளர்கள் பார்வையிட ஏதுவாக, நிலா மாடமானது இத்தளத்தின் தகுந்த இடத்தில் அமைக்கப்பட்டு பூங்காவின் அனைத்து இடங்களையும் இங்கிருந்தே முழுமையாகப் பார்க்க வழிவகுக்கிறது. கொடிப் பந்தல்கள், வளைவுகள், அமர்விடங்கள், கோடைக் குடில்கள், ரோஜாக் குடைகள், ரோஜாக் குகைகள் ஆகியவையும் இத்தளத்தில் அமையப் பெற்று இந்நிலவடிவமைப்போடு குறைவற ஒன்றிணைந்து மிளிர்கின்றன.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிறிய தளமான மூன்றாம் தளத்தில் புளோரிபன்டா வகை ரோஜாக்கள் பராமரிக்கப்படுகின்றன. அகன்ற நான்காம் தளமானது சேவைச் சாலைக்குக் கீழ்ப்புறம் அமைந்துள்ளது. இதில் நடுவே நடைபாதையும் இருபுறங்களிலும் அழகான வகை ரோஜாச் செடிகளும் அமைந்துள்ளன. இத்தளத்தின் வடகோடியில் கிக்கியு புல்லினால் வேயப்பட்ட புல்வெளி அருகே உள்ள கோள நீருற்றுடன் இணைந்து பார்வையாளர்களைத் தம்பால் இழுக்கிறது. நான்காம் மற்றும் ஐந்தாம் அடுக்குகளுக்கிடையேயுள்ள சரிவு மிகப் பெரியதும் மிக ஆழமானதும் ஆகும். இது ஒரு கம்பீரமான பசும் சுவர் போல் திகழ்கிறது. இதன் சரிவுகளில் அமைந்துள்ள, தாவர வகைகள் மற்றும் அமர்விடங்கள் ஒரு சிலிர்ப்பினை ஏற்படுத்தி பார்வையாளர்களின் சாகச உணர்வினைத் தூண்டுகின்றன. ஐந்தாம் அடுக்குத்தளம் வரையில் கண்ணுற்ற பிறகு, இந்தியாவில் உள்ள அனைத்து ரோஜா வகைகளையும் ஒரே இடத்தில் கண்ட நிறைவு ஒருவருக்கு நிச்சயம் ஏற்படும்.

சிம்ஸ் பூங்கா, குன்னூர்

குன்னூரிலுள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு துவக்கப்பெற்று செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. 12.14 எக்டர் பரப்பில் மேடு பள்ளங்கள் உடைய நிலப்பகுதியுடனும் பல்வேறு விரும்பத்தக்க அம்சங்களுடனும் இப்பூங்கா அமைந்துள்ளது. நகரத்தின் ஈர்ப்புமிக்க மையப் பகுதியில் அமைந்துள்ளதால் பார்வையாளர் எவரும் இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்காவினைப் பார்த்து மகிழும் வாய்ப்பினை நழுவ விடுவதில்லை. இப்பூங்காவில் 86 தாவரக் குடும்பங்களை சார்ந்த 1200 வகையான தாவரங்கள் உள்ளன. மிக அரிதான மரங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன. அவையாவன, உருத்திராக்கம் (ஈலியாகார்பஸ் கானிட்ரஸ்), பேப்பர் மரம் (மிலாலியுகா ஸ்டைபிலோடஸ்), கற்பூர மரம் (சின்னாமோமம் விட்டி), டர்பன்டைன் மரம் (சைகார்பியா லானிபோலியா) பூக்கும், யூகலிப்டஸ்  (யூகலிப்டஸ் பிலிபோலியா) யானைக்கால் மரம்  (அரோகாரியா பிட்வில்லி) மற்றும் ஸ்ட்ராபெர்ரி (அர்பியுடஸ் யுனிடோ).

இப்பூங்காவின் மேற்பகுதியில் இரண்டு சீரான  தளைகளில் வண்ண ஆண்டு மலர் சாகுபடி செய்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. எப்போதும் பசுமையாகக் காணப்படும் வகையில் புல்தரையும் நன்கு பராமரிக்கப்படுகிறது. தளங்களில் வளர்க்கப்பட்டு வரும் மலர் படுக்கைகளும் அவற்றின் அழகு மிக்க மலர்களும் பசும்புல் வெளிக்கு மேலும் மெருகூட்டுகின்றன. ஆசாலியாஸ், அபிலியா மற்றும் கியுப்ரசஸ் போன்ற தாவரங்கள் உயிர் வேலியாக அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவில் 200 வகையான ரோஜா மலர்ச் செடிகள் அமைந்துள்ளன. மேலும் ஆண்டு தோறும் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. பொருத்தமான இடங்களில் பாறை அலங்காரத் தோட்டங்கள் அமைக்கப் பெற்று பூங்காவிற்கு ஒரு மாறுபட்ட முரட்டு அழகினை அளித்து இப்பூங்காவினை மெருகூட்டுகின்றன. கீழ் மட்டத்திலுள்ள இரண்டு தீவுகளுடன் கூடிய ஏரி அண்மையில் தூர் வாரப்பட்டு அருகிலுள்ள இடங்கள் நில எழில் ஊட்டுதல் செய்து தொடரலை தோற்றமுடைய மலர்ப்படுக்கைக்களுடன் கூடிய புல்வெளி கொண்ட நிலக் காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டி உள்ள கோடை வீடு மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புல்வெளி, ரோஜா மற்றும் பிற தாவரங்கள் அனைவரின் கவனத்தைக் கவரும் அழகிற்கு அழகூட்டும் அம்சங்களாகும்.

கீழ்ப்பகுதியில் அமையப் பெற்றுள்ள ஏரியில் படகு சவாரி செய்வது நமக்கு ஒரு இனிய அனுபவத்தைத் தருகிறது. குழந்தைகள் விளையாடும் இடம் நம் குறும்புக்காரக் குழந்தைகளை மகிழ்வூட்டுகிறது. ஏரியை சுற்றி இப்பூங்கா மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இதில் பலவகையான செடிகளும், நிழலில் வளரும் தாவரங்களும் நடப்பட்டு கூடுதல் அழகு சேர்க்கும் வண்ணம் பார்வையாளர்களுக்கு மனமகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து பல பணிகள் இப்பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு இருப்பினும் இதன் பூர்வீக வரைவமைப்பு மாறுபடாமலும் நீலகிரி மாவட்டத்தின் தாவரவியல் உண்மைத்தன்மை மாறாமலும் பாதுகாக்கப்படுவது மன நிறைவினைத் தருகிறது. தோட்ட ஆர்வலர்களின் வளர்ந்து வரும் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில் பூங்காவின் வடகிழக்கு பகுதியில் சிறு நாற்றங்கால் அமைக்கப்பெற்று அலங்கார மரக்கன்றுகள், செடிகள், ரோஜா வகைகள் போன்றவைகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டு தோறும் மே மாதத்தின் கடைசி வாரத்தில் சிம்ஸ் பூங்காவில் பழக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இது சுமார் 4 இலட்சம் பார்வையாளர்களை கவர்ந்திடும் நிகழ்ச்சியாக திகழ்கிறது. பரபரப்புமிகுந்த குன்னூர் நகரில் அமைந்திருந்தாலும் சிம்ஸ் பூங்காவில் கிடைக்கும் அமைதியான அனுபவம் மெய்யாகவே ஒவ்வொருவரையும் வியக்க வைக்கிறது.



"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"







Post a Comment

أحدث أقدم